இந்தியா

பாஜகவிடம்தான் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ உள்ள பென்டிரைவை கொடுத்தேன்- ஓட்டுநர் கார்த்திக்

Published On 2024-04-30 11:31 GMT   |   Update On 2024-04-30 11:33 GMT
  • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
  • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை அவரது முன்னர் ஓட்டுநர் கார்த்திக் 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது.

இதனையடுத்து, இந்த தகவலை ஓட்டுநர் கார்த்திக் மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை ஹாசன் பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவிடம் தான் நான் கொடுத்தேன். பாஜக தலைவரைத் தவிர வேறு யாரிடமும் இதை நான் கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News