செய்திகள்

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மாணவர் மரணம்: வலுக்கட்டாயமாக அலர்ஜியான உணவு கொடுத்தது அம்பலம்

Published On 2017-07-12 15:15 GMT   |   Update On 2017-07-12 15:15 GMT
இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர், வலுக்கட்டாயமாக அலர்ஜி ஏற்படுத்தும் உணவு கொடுக்கப்பட்டதால் இறந்துபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள கிரீன்போர்டு பகுதியில் அமைந்துள்ள வில்லியம் பெர்கின் உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தவர் கரன்பீர் சீமா. இவர் இந்திய வம்சாவளி மாணவர்.

இவருக்கு பால் உள்ளிட்ட உணவு பொருள்களை சாப்பிட்டால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். அதனால் வெண்ணெய் உள்பட பல்வேறு பால் சார்ந்த உணவு வகைகளை அவர் தவிர்த்து வந்தார். இவரது அலர்ஜி குறித்து பள்ளி நிர்வாகத்துக்கும் தெரியும்.

இதற்கிடையே, கரன்பீர், ஜூன் 28ம் தேதி பள்ளிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளை வந்தது. வழக்கம்போல் மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டனர். பிற்பகலில் வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்தில் கரன்பீருக்கு உடல் நிலை மோசமானது. இதையடுத்து ஆசிரியர் அவனை பள்ளி நிர்வாகத்திடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் நாளுக்கு நாள் அவனது உடல் நிலை மோசமடைந்து வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரன்பீர் கடந்த ஞாயிறன்று, சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.



இதையறிந்த பெற்றோர், மகனின் இறப்பில் மர்மம் உள்ளது என தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்காட்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கரன்பீருக்கு வலுக்கட்டாயமாக பால் சார்ந்த உணவு பொருள்கள் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கரன்பீருடன் படித்த மற்றொரு மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பள்ளியின் வலைத்தளத்தில் “இந்திய மாணவனின் இறப்புக்கு அலர்ஜி தான் காரணம். எனவே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

அலர்ஜி என தெரிந்தும் வலுக்கட்டாயமாக பால் சார்ந்த உணவு பொருளை கொடுத்ததால் மாணவன் இறந்து போனது இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News