செய்திகள்
பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் முருகன் பேசியபோது எடுத்த படம்.

தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் 60 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்- எல் முருகன் பேச்சு

Published On 2020-09-21 09:39 GMT   |   Update On 2020-09-21 09:39 GMT
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் 60 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் முருகன் பேசினார்.
விழுப்புரம்:

விழுப்புரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஓ.பி.சி. அணி மாநில தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் மாநில அமைப்பாளர் கேசவன் விநாயகம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும், நல்லது செய்தாலும் தமிழக மக்களுக்கு திரித்து கூறுவதும், அரசியலாக்குவதும் தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் வேலை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின் ஒரு விவசாயியே இல்லை. விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத அவருக்கு, இச்சட்ட மசோதா குறித்து பேச தகுதி இல்லை.

பா.ஜனதா கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா தொடர்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கோட்டையில் பா.ஜனதா கொடி பறக்கும். மத்திய அரசின் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தில் பா.ஜனதா தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றிபெறும். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் கூட்டணி குறித்து பேசுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா தலைவர் கலிவரதன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரபு, சண்முகம், தியாகராஜன், பாரதீய ஜனதா நிர்வாகிகள் சுகுமார், ஜெயக்குமார், சதாசிவம், துரை சக்திவேல், ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News