செய்திகள்
திருமுருகன் காந்தி

தேக்கடியில் கேரள அரசின் கட்டுமான பணிகளை தமிழகம் தடுக்க வேண்டும்- திருமுருகன் காந்தி பேட்டி

Published On 2020-01-09 10:05 GMT   |   Update On 2020-01-09 10:05 GMT
தேக்கடியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டும் பணிகளை நடத்தி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

கூடலூர்:

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மே-17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதனை தடுக்க கேரள அரசு தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறது.

பேபி அணையை வலுப்படுத்தும் கட்டுமானப்பணிக்கு மின்சாரம், கல்பாலம் அமைத்தல், தமிழக படகுகள் இயக்கம் போன்றவைகளுக்கு கேரள அரசிடம் இருந்து இதுவரை உதவி கிடைக்கவில்லை. தமிழக அரசும் அழுத்தம் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான ஆனவச்சால் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டும் பணிகளை நடத்தி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக - கேரள மக்களிடையே நட்புணர்வை வளர்க்கும் வகையில் இரு மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். தமிழகத்தின் உரிமையை நிலை நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது 5 மாவட்ட விவசாயிகளின் சங்க தலைவர் அப்பாஸ் உள்பட விவசாய பிரததிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News