செய்திகள்
வைகோ

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பேரணியில் கரம் கோர்ப்போம்- வைகோ

Published On 2019-12-21 06:19 GMT   |   Update On 2019-12-21 06:19 GMT
மதசார்பற்ற தன்மையை நிலை நாட்ட மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பேரணியில் கரம் கோர்ப்போம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரதிய ஜனதா கட்சி அரசு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘இந்து ராஷ்டிரா கனவை’ நனவாக்கிட நாட்டின் பன்முகத் தன்மையை சீரழித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் என்று அடுத்தடுத்து தங்கள் நீண்ட கால செயல்திட்டத்தை நிறைவேற்ற முனைந்துள்ள பா.ஜ.க. அரசு தற்போது குடியுரிமை திருத்தத் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.

இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் எரிமலையென வெடித்து இருக்கிறது. காவல்துறை அடக்குமுறையை ஏவி இந்நாட்டு இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்கிவிடலாம் என்று இந்துத்துவ மதவாத சனாதன அரசு மனப்பால் குடிக்கிறது.

இந்தியா இந்துக்களின் நாடு, இங்கு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அந்நியர்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். மதவாத கருத்தியலை சட்டபூர்வமாக்கி, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற முனைந்திருக்கிறது பா.ஜ.க. அரசு.

மத அடிப்படை வாதத்தைப் பெரும்பான்மைவாதமாக, தேசியவாதமாகக் கட்டமைத்து வரும் பா.ஜ.க. அரசும், அதற்குத் துணை போகின்ற கட்சிகளையும் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.

மகாத்மா காந்தி கட்டமைத்த மதச்சார்பற்ற இந்தியாவைச் சீரழிக்க முனைந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்து எழவேண்டிய நேரம் வந்து விட்டது.

பாசிச பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்த சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் டிசம்பர் 23 காலை 9 மணி அளவில் பேரணி நடைபெறுகிறது.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகிலிருந்து ராஜரத்தினம் திடல் நோக்கி நடைபெறும் இந்த மாபெரும் பேரணியில் கழகக் கண்மணிகளும், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஜனநாயகம் காக்க, மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்ட கரம் கோர்த்து எழுவோம்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Tags:    

Similar News