செய்திகள்

கிருஷ்ணகிரியில் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2019-06-16 17:10 GMT   |   Update On 2019-06-16 17:10 GMT
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி:

மதுரை மீனாட்சிபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஷாஜிதா. இவர் நேற்று தனது காதல் கணவர் ஆனந்தன் என்பவருடன் கிருஷ்ணகிரி  மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு எஸ்பி பண்டிகங்காதரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் மதுரையில் பெற்றோருடன் வசித்து வந்தேன். மேலும், மதுரையில் ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தேன். அந்த கடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஒப்பதவாடி கிராமததைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன் (27) என்பவர் வேலை செய்து வந்தார். நாங்கள் 2 பேரும் 6 மாதமாக காதலித்து வந்தோம். 2 பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். நான் எனது கணவர் ஆனந்த்தின் குடும்பத்தினர் சம்மதத்துடன் 14.6.2019 அன்று பர்கூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணம் குறித்து எனது பெற்றோருக்கு தெரிய வந்தது. 

நான் வீட்டில் இருந்து வெளியேறியதும், எனது பெற்றோரிடம் விஷயத்தை கூறி என்னை தேட வேண்டாம் என கூறினேன். ஆனால் அவர்கள் என்னை காணவில்லை என மதுரை போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் மதுரை போலீசார் கிருஷ்ணகிரிக்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் எங்களை மதுரைக்கு வர சொல்லி அழைத்தனர். அவர்கள் எங்களை பிரித்து விடுவார்களோ என்று பயமாக உள்ளது. எனவே இது குறித்து விசாரித்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து வாழ வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.     
Tags:    

Similar News