தமிழ்நாடு

நீலகிரியில் கொட்டித்தீர்த்த கோடை மழை- ஊட்டியில் மீண்டும் குளுகுளு காலநிலை

Published On 2024-05-05 05:47 GMT   |   Update On 2024-05-05 05:47 GMT
  • குன்னூர்-கோத்தகிரி சாலை அடுத்த வட்டப்பாறை பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • டால்பின் நோஸ்-லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் வழியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அனல் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்ட அளவில் வெயிலின் தாக்கம் மேலும் கூடுமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் அங்கு சூறாவளி காற்றுடன் கோடைமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மீண்டும் குளுகுளு காலநிலை தலை தூக்கியதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் இதமான காலநிலை நிலவியது. இந்த நிலையில் அங்கு நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது.

இதனால் அங்குள்ள நீரூற்றுகள், கிணறுகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

கோத்தகிரியில் கடும் வறட்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வந்த நிலையில் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் நீராதார பகுதிகளில் தண்ணீர் தேங்கி குடிநீர் பிரச்சினை தீருமென பொதுமக்கள் நிம்மதி தெரிவித்து உள்ளனர்.

குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் லேம்ஸ்ராக் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் அங்கு நின்றிருந்த கார்கள் சேதம் அடைந்தன.

ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் நேற்று மதியம் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் அங்கு வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடியது.

அதிலும் குறிப்பாக கமர்சியல் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகனங்கள் செல்வதிலும் சிரமநிலை ஏற்பட்டது. அதே போல பஸ் நிலையம் அருகிலுள்ள ரெயில் பாலத்தின் அடியில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

ஊட்டியில் கோடை விழா சீசன் தொடங்க உள்ள நிலையில் தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் மீண்டும் பச்சைப்பசேல் பசுமைக்கு மாறி இருப்பதால் தோட்டகலை துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஊட்டி, குன்னூருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி, சேலாஸ், கரும்பாலம், மரப்பாலம், அடார், சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கோடை மழையால் அந்த பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கோடை மழையில் நனைந்தபடி அங்குள்ள பகுதிகளை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே குன்னூரில் கோடை மழை காரணமாக அந்த பகுதிகளில் 6 முறை மின் தடை ஏற்பட்டது.

மேலும் குன்னூர்-கோத்தகிரி சாலை அடுத்த வட்டப்பாறை பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மின்ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் டால்பின் நோஸ்-லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் வழியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News