செய்திகள்

பிரதமர் மோடி 19-ந்தேதி வருகை: பாஜக -காங்கிரஸ் போட்டி போராட்டம் அறிவிப்பு

Published On 2019-02-03 12:04 GMT   |   Update On 2019-02-03 12:04 GMT
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந்தேதி குமரி மாவட்டம் வருகை தருவதால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. #congress #bjp #pmmodi

நாகர்கோவில்:

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அவர் அன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

அப்போது குமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தும், தொடங்கி வைத்தும் பேசுகிறார். மேலும் அதே மைதானத்தில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மோடி பேசுவதற்காக 2 மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் அறிவித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி அளித்த வாக்குறுதிகளான கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன், குமரி மாவட்டத்தில் விமான நிலையம், ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும் போன்றவற்றை அவர் நிறைவேற்ற வில்லை என்பதால் கருப்பு கொடி போராட்டத்தை நடத்தப் போவதாக அவர் அறிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ.வுக்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்தது. மோடிக்கு கருப்பு கொடி காட்டினால் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டை முற்றுகையிடுவோம், அவர் எங்கு சென்றாலும் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட பாரதீய ஜனதா கூட்டத்திலும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதனால் காங்கிரஸ், பாரதீய ஜனதா தொண்டர்கள் இடையே பரபரப்பான சூழ் நிலை உருவானது.

இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரசார் இதற்கு ஒருபடி மேலே சென்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. வீட்டை பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டாலோ, அவருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினாலோ, மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

பாரதீய ஜனதா மற்றும் காங்கிரசாரின் இந்த போட்டி போராட்ட அறிவிப்பு குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #congress #bjp #pmmodi

Tags:    

Similar News