செய்திகள்

புயல் தாக்கி 11 நாட்களாகியும் மின்சாரம் இல்லை- பட்டுக்கோட்டை பகுதியில் அரிக்கேன் விளக்கு விற்பனை

Published On 2018-11-26 10:00 GMT   |   Update On 2018-11-26 10:35 GMT
கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையே அடியோடு புரட்டி போட்டு விட்டதால் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரிக்கேன் விளக்கு விற்பனை செய்யப்படுகிறது. #gajacyclone #cycloneeffected

பட்டுக்கோட்டை:

கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையே அடியோடு புரட்டி போட்டு விட்டது. லட்சக்கணக்கான குடிசை வீடுகள், தென்னை மரங்கள், மற்றும் படகுகள் சேதமாகி உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நிவாரண முகாமில் தங்கி உணவுக்காக கையேந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புயல் தாக்கி 11 நாட்களாகியும் இதுவரை எந்த பகுதிக்கும் மின்சாரம் வழங்க வில்லை.

குறிப்பாக நாகை, வேதாரண்யம், பட்டுக் கோட்டை, மன்னார் குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பேராவூரணி, அதிராம் பட்டினம், திரு மருகல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் சேதமான மின்கம்பங்கள் சரிசெய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

தற்போது மக்களுக்கு உணவு, குடிநீர் பிரச்சினையை கூட ஒரளவுக்கு சமாளித்து வருகிறார்கள். ஆனால் இரவு நேரத்தை குழந்தைகளுடன் எப்படி சமாளிப்பது? என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் ஆங்காங்கே புயல் சேத மரக்கிளைகளின் குப்பைகள், மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி, எமர்சென்சி லைட் மூலம் சமாளித்து வருகிறார்கள்.

தற்போது பட்டுக்கோட்டை நகரில் மக்கள் இரவு நேரத்தை சமாளிக்க அரிக்கேன் விளக்கை வாங்கி வருகின்றனர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராம பகுதிகளில் மண்எண்ணை மூலம் அரிக்கேன் விளக்கை பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு கால மாற்றத்தில் மெழுகுவர்த்தி, எமர்ஜென்சி லைட்டை பயன்படுத்தினர்.

கடந்த 16-ந் தேதி வீசிய கஜா புயல், டெல்டா மக்களின் வாழ்க்கையை 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளி விட்டது. இதேபோல் நாகரீகமற்ற வாழ்க்கையில் மக்களை 20 ஆண்டுகளுக்கு பின்னுக்கு தள்ளி விட்டது என்றால் மிகையாகாது.  #gajacyclone #cycloneeffected

Tags:    

Similar News