செய்திகள்

நிவாரண நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்- வைகோ பேட்டி

Published On 2018-11-19 10:52 GMT   |   Update On 2018-11-19 10:52 GMT
கஜா புயலால் பாதிப்பு அடைந்த குடும்பங்களுக்கு நிவாரண வழங்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #gajacyclone

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சுனாமிக்கு அடுத்து அதிர்ச்சி தரத்தக்க சேதத்தை கஜா புயல் 8 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் திருமறைக்காடு பகுதி புயலால் நாசமாகியுள்ளது.

ஏராளமான கால் நடைகள் இறந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு தொற்று நோய் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

1 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 85 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. 850 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.

விவசாயிகள் வாழ்வு அடியோடு நாசமாகியுள்ளது. தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து உள்ளன. விவசாயிகளின் 15 வருட உழைப்பு வீணாகி உள்ளது.


எனவே சரியான கணக்கெடுப்பின் மூலம் அந்த குடும்பங்களை வாழ வைப்பதற்கான அடுத்த கடமையை அரசு செய்ய வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

விவசாயத்தை சரி செய்ய வேண்டிய வேலையை அரசு செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எவ்வாறு தீவிரம் காட்டப்பட்டதோ அதேபோல நிவாரண நடவடிக்கைகளிலும் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #vaiko #gajacyclone

Tags:    

Similar News