செய்திகள்

மோடியின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று கைது செய்வதா? - வைகோ கண்டனம்

Published On 2018-08-30 07:22 GMT   |   Update On 2018-08-30 07:22 GMT
மோடியின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று கைது செய்வதா? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். #Vaiko #MDMK

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தலித் மக்களைத் தூண்டிவிட்டு கலவர விதைகளை தூவினர் என்று குற்றம்சாட்டி, கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று தலித் உரிமை செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, வழக்கறிஞர் சுரேந்திரா காட்லிங், மகேஷ் ரவுட், ஷோமாசென், ரோனா வில்சன் ஆகிய ஐந்து பேரை மராட்டிய பாரதிய ஜனதா அரசு கைது செய்தது. இவர்கள் அனைவர் மீதும் தடா, பொடா போன்று தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் கொடிய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நேற்று முன்தினம், ஆகஸ்ட் 28-ந்தேதி, பீமா கோரேகான் கலவர வழக்கை காரணமாக கலீட்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்களுமான ஐந்து பேரை மராட்டிய மாநில அரசு, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அறிவித்தலின்படி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக மராட்டிய காவல்துறை டெல்லி, ஐதராபாத், பரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞரும், சமூக ஆர்வலருமான பேராசிரியர் வெர்னான் கோன்சால்வஸ், டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், குடியுரிமை சுதந்திரத்துக்கான மக்கள் அமைப்பின் தேசியச் செயலாளருமான, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகளுக்காகப் போராடி வரும், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் பெரைரா, மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பின் உறுப்பினரும், மனித உரிமைப் போராளியுமான ஹரியானாவைச் சேர்ந்த கவுதம் நவ்லகா ஆகியோர் சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது மராட்டிய காவல்துறை வழக்கு புனைந்து இருக்கிறது.

 


மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் நிபுணர்கள், அரசு விமர்சகர்கள், இந்துத்துவா மதவெறியை எதிர்க்கும் ஜனநாயகப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்தரை குத்துவது மோடி அரசின் பாசிசப் போக்கை அப்பட்டமாக காட்டுகிறது. உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்துள்ளது. மராட்டிய மாநில அரசு உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நீதி கேட்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது. அவரை தனிமை சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறது.

பயங்கரவாதிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் ‘உபா’ சட்டத்தை மத்திய அரசை எதிர்ப்பவர்கள் மீது ஏவி விடுவது அநீதியான அக்கிரம மான நடவடிக்கை ஆகும்.

மோடி அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து கிடக்கும் எடப்பாடி அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக் திரும்பப் பெற்றுஅவரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Tags:    

Similar News