செய்திகள்

தனது சுய நலத்துக்காகவே கமல் குமாரசாமியை சந்தித்து உள்ளார்- ஈஸ்வரன்

Published On 2018-06-06 10:42 GMT   |   Update On 2018-06-06 10:42 GMT
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

கமல்ஹாசன் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லி விட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.

காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதே போல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சனைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சனையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Tamilnews
Tags:    

Similar News