செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தாய், மகள் மீது தாக்குதல் - வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

Published On 2018-03-01 06:34 GMT   |   Update On 2018-03-01 06:34 GMT
திருக்கோவிலூர் அருகே தாய், மகள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக வடமாநில வாலிபர்கள் உள்பட 34 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ஆராயி (வயது 46).

இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகன்கள் 3 பேர் பெங்களூருவிலும் இருந்தனர். ஒரு மகள் திருப்பூரில் வேலைப் பார்த்து வருகிறார்.

ஆராயி தனது இளையமகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோருடன் வெள்ளம்புத்தூரில் வசித்து வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு அவரது வீட்டுக்குள் மர்ம மனிதர்கள் புகுந்தனர்.

அவர்கள் ஆராயி, தனம், சமயன் ஆகியோரை கொடூர முறையில் தலை உள்பட பல இடங்களில் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் சமயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த ஆராயி, தனம் ஆகிய 2 பேரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆராயி, தனம் ஆகியோரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு மயக்க நிலையில் இருந்த ஆராயிக்கு நினைவு திரும்பியது. ஆனால், சிறுமி தனத்துக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அவரது தலையில் பலத்த அடிபட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.

ஆராயி, தனம் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்களா? என்பது குறித்து தடயவியல் பரிசோதனை முடிந்த பிறகுதான் முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்று அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு குற்றவாளிகளை தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகியும் குற்றவாளிகள் யார்? என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. தனிப்படை போலீசார் வெள்ளம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இரவும், பகலும் ரோந்து சுற்றி குற்றவாளிகளை தேடிவருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-

மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. வெள்ளம்புத்தூரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த ஆந்திர வாலிபர்கள் 4 பேரை பிடித்து விசாரித்துள்ளோம். இதுவரை 34 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. விரைவில் அவர்களை கைது செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆராயி, தனம் ஆகிய இருவரையும் அமைச்சர் சி.வி.சண்முகம், புதுவை அன்பழகன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பார்வையிட்டனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். #tamilnews
Tags:    

Similar News