செய்திகள்
பள்ளியின் மேற்கூரையில் மாணவர் பணியில் ஈடுபட்ட காட்சி.

பள்ளியின் உடைந்த ஓடுகளை மாணவர்களை கொண்டு அகற்றிய ஆசிரியர்கள்: பெற்றோர் எதிர்ப்பு

Published On 2017-10-24 05:41 GMT   |   Update On 2017-10-24 05:41 GMT
கோத்தகிரியில் மாணவர்கள் சிலர் பள்ளியின் மேற்கூரையில் ஏறி சேதம் அடைந்த ஓடுகளை மாற்றி சரி செய்தனர். இதைப்பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த பள்ளியின் ஓடுகள் உடைந்து காணப்பட்டது. இதனால் மழைகாலங்களில் பள்ளிக்கூடத்திற்குள் தண்ணீர் தேங்கி மாணவர், ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாணவர்கள் சிலர் பள்ளியின் மேற்கூரையில் ஏறி சேதம் அடைந்த ஓடுகளை மாற்றி சரி செய்தனர். இதைப்பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாதுகாப்பற்ற முறையில் மாணவர்களை வேலைக்கு அமர்த்தியது குறித்து பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து கண்டனம் தெரிவித்தனர். பெற்றோர்களின் எதிர்ப்பையடுத்து மாணவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது:-

ஓடுகளை மாற்றுவது முறையான பணியாளர்களை கொண்டு செய்ய வேண்டும். இதில் மாணவர்களை ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளியை சீரமைக்க வேண்டும் என்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கூறும்போது, குரங்குகள் தொல்லையால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆசியர்களின் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்றது என்றார்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News