செய்திகள்

ஆசிரியர்கள் போராட்டம் நீடிக்க ஆட்சியாளர்களே காரணம்: கி.வீரமணி குற்றச்சாட்டு

Published On 2017-09-15 10:45 GMT   |   Update On 2017-09-15 10:45 GMT
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நீடிக்க ஆட்சியாளர்களே காரணம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டினார்.

தஞ்சாவூர்:

முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை யொட்டி தஞ்சையில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

பேரறிஞர் அண்ணாவை அ.தி.மு.க.வினர் பட மாகத்தான் பார்க்கிறார்கள் பாடமாக பார்க்கவில்லை. அண்ணா எந்த நோக்கத்திற்காக கட்சியை தொடங்கினார் என்பதை அவர்கள் நினைத்து பார்க்கவில்லை. அதனால் தான் போராட்டங்கள் நீடித்து கொண்டே போகிறது. போராட்டம் நடத்துபவர்களை அழைத்து யாரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவது இல்லை. ஆனால் அண்ணா போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து பேசி சமாதானபடுத்துவார். அதற்கு உதாரணமாக மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களை அழைத்து பேசி சமாதானப்படுத்தினார்.

அதை செய்ய இன்றைய ஆட்சியாளர்கள் முன்வருவ தில்லை. ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் அழைத்து பேசி இருந்தால் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்து இருக்கலாம். கடந்த பல மாதங்களாகவே அ.தி.மு.க.வில் அணிகள் மோதல் நடந்து வருகிறது. அவர்கள் வேஷ்டி இருக்கிறதா? துண்டு இருக்கிறதா? என்று பார்ப்பதில்லை. துண்டை பற்றி கொண்டு வேஷ்டியை மறந்துவிடுகிறார்கள். இளைஞர்களை எப்படியாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்க்க வேண்டும்என்ற நோக்கத்தில் எச்.ராஜாவை சாரணர் இயக்க தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளனர். கல்வியை காவி மயமாக்க நினைக்கிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. அதை நடக்க விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அமர் சிங் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் அய்யனார், மாநகர தலைவர் நரேந்திரன், செயலாளர் கரந்தை முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்தங்கராஜ் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெற்றிகுமார். மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் அழகிரிசாமி, மாநில மகளிரணி செயலாளர் கலை செல்வி மற்றும் திராவிடர் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News