search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் போராட்டம்"

    • கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
    • 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    சேலம்:

    தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் 5-வது நாளாக இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து, கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சேலம் கோட்டை மெயின் ரோட்டில் 5-வது நாளாக இன்று சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் சுமார் 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    • முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.
    • சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த. அமிர்த குமார், தலைமைச் செயலக பணியாளர் சங்க மேனாள் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் அகில இந்திய தலைவர் கே. கணேசன்,

    தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வே.மணிவாசகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவி சு. தமிழ்ச்செல்வி, தமிழ் மாநில அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மு. செ. கணேசன், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணி தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெ.சரவணன், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க மாநிலத் தலைவர் எஸ் மதுரம், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜெய.துரை, தமிழ்நாடு உயர் கல்வி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் டாக்டர்.இரா. மணிகண்டன், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சு.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    10 அம்சக் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கொடுத்தும், அதன் மீது கடந்த சட்டமன்ற தொடரில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

    எனவே அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுடைய பல லட்சம் வாக்குரிமை உள்ள குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மார்ச் 3-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • தி.மு.க அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதி.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இப்போது சென்னையில் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு நிதிநிலைமை சீராகும் போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

    எனவே தமிழக தி.மு.க அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதி, ஆசிரியர்களின் பொருளாதார நிலைமை, மாணவர்களுக்கு போராட்டமில்லா ஆசிரியர்களின் கற்பித்தல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உடனடியாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நூற்றுக்கணகான போலீசார் குவிக்கப்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
    • 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    சென்னை:

    இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சமநிலை வேலைக்கு சம ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் முற்றுகையிட ஆசிரியர்கள் அணி அணியாக திரண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களை பள்ளி கல்வி அலுவலக வளாகத்திற்குள் நுழைய விடாமல் பிரதான கதவுகளை மூடி இருந்தனர்.

    நூற்றுக்கணகான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    ஆனாலும் போராட்டக்காரர்கள் நுழைவு வாசலை முற்றுகையிட்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்) சார்பில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. பொதுச்செயலாளர்கள் ரங்கராஜன், முத்துச்சாமி, வின்சென்ட், பால்ராஜ், மயில், தாஸ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளுக்கு வழங்கும் உதவி போல உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • பலர் வாழ்த்துரை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி குடும்பத்துடன் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர், திருப்பதி, மாவட்ட தலைவர் சரவணன் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

    ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் வெங்கடாசலம் செயலாளர் பிரேம் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயலாளர் ரமேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிராம சுகாதார செவிலியர் மற்றும் மேற்பார்வையாளர் சங்க தனலட்சுமி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் ஆசிரியர்கள் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
    • ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னை:

    பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் அரசாணை 149 ரத்து செய்யப்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் அறிவித்துள்ளனர்.

    • தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • 30-ல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்தனர்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து டிட்டோ ஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் கூறியதாவது:- நாங்கள் முன்வைத்த 30-ல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அதற்கு எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

    அதையேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டபடி சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் நாளை போராட்டம் நடத்தப்படும்.

    இதில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தற்செயல் விடுப்பு அளித்து விட்டு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், எமிஸ் தளத்தில் வருகைப்பதிவு தவிர்த்து இதர அலுவல் பணிகளை வருகிற 16-ந் தேதி முதல் ஆசிரியர்கள் மேற்கொள்ள மாட்டார்கள்" என்றார். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட உள்ள ஆசிரியர் சங்கங்களுடன் இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அமைச்சரிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு முறையான அழைப்பு இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் சங்கம் பேச்சுவார்த்தையை புறக்கணித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு சங்கத்துக்கும் போன் செய்து அழைத்திருந்தோம்.
    • எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் வந்து தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சென்னையில் நாளை போராட்டம் நடத்த உள்ளது.

    இந்த சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை காத்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு சங்க நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு சங்கத்துக்கும் போன் செய்து அழைத்திருந்தோம். அவர்களும் என்னிடம் காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருவதாக நேற்று தெரிவித்து இருந்தனர்.

    நான் இன்று காலை 8 மணியில் இருந்து எனது வீட்டில் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. பரவாயில்லை. அவர்களுக்குள்ளே ஒரு சில முரண்பாடுகள் இருக்கிறது. அப்போதும் கூட நான் எல்லோரும் பேசி ஒருமித்த கருத்தோடு என்னை பார்க்க வாருங்கள் என்றேன். உங்களுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.

    அதன்படி வீட்டில் 8 மணியில் இருந்து காத்திருந்தேன். 9 மணி வரை வரவில்லை. அதன் பிறகு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். இதன் பிறகு மறுபடியும் 10 மணியில் இருந்து எனது வீட்டுக்கு சென்று ஆசிரியர்களுக்காக காத்திருந்தேன்.

    இன்று நாள் முழுவதும் காத்திருக்கிறேன். அவர்களுக்காக எனது இல்லத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் வந்து தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம். பேச்சுவார்த்தைக்காக அவர்களை மீண்டும் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அவர்கள் அறிவித்தனர்.

    • மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சென்னை:

    கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு சமுதாய கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு கழிவறையில் தண்ணீர் வரவில்லை. குடிப்பதற்கு குடிநீர் இல்லை என ஆசிரியர்கள் மனம் குமுறினர்.

    இதுபற்றி மாநில துணை செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

    அதிகாலையில் கைது செய்து இங்கு அழைத்து வந்தனர். பெண்கள் கைக் குழந்தைகள் உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இங்கில்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை.

    பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆசிரியர்களை தரம் தாழ்த்தி வழிநடத்துகின்றனர். நாங்கள் உணவு கேட்கவில்லை. 300 பேர் உள்ள இடத்தில் 30 பேருக்கு மட்டும் உணவு கொடுத்தால் எப்படி? அதனால் தான் நாங்கள் யாரும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.

    குழந்தைகளுக்கு மட்டும் பிஸ்கெட் வாங்கி கொடுத்தோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இந்த சமுதாய கூடத்திலும் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.
    • ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாள தமிழக அரசு தவறி விட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட 311-வது மற்றும் 181-ம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

    அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181-வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைது செய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும், வன்மையாக கண்டிக்கிறேன்.

    100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்கள் இப்போது முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள் தான். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. அரசு இன்னும் கூடுதல் காலக்கெடு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் இந்த நிலைப்பாட்டை மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாள தமிழக அரசு தவறி விட்டது. போராட்டம் தொடங்கி 6 நாட்கள் வரை அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கே அரசு முன்வரவில்லை. தாமதமாக அரசு நடத்திய பேச்சுகளிலும் கூட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அவர்களை அழைத்துப் பேசி, அரசின் நிலைமையை விளக்கி, ஒரு சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதன் தீர்வுகளை ஆசிரியர்கள் மீது திணித்தது தான் போராட்டம் தொடர்வதற்கு காரணம் ஆகும்.

    இந்த உண்மைகளையெல்லாம் உணராமல், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தங்களின் வாழ்வுரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அடக்குமுறை மூலம் நசுக்க முயலக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

    ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட குழுவே செயல்படாத நிலையில், மீண்டும் அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற முடியாது எனக்கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் காவல்துறையினரால் இன்று அதிகாலை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.
    • போலீசார் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குவிய நேரிட்டது.

    சம வேலைக்கு சம ஊதியம், முழு நேர ஆசிரியர் பணி, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகள் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக அரசு பல தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பிறகு அவர் ஆசிரியர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சம வேலைக்கு சம ஊதியம் குறித்து பரிசீலிக்க மூவர் குழு அமைக்கப்படும். சிறப்பாசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,500 அதிகரிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் இதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்தனர்.

    இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார். அதையும் ஆசிரியர்கள் நிராகரித்தனர்.

    போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் நேற்று இரவு அறிவித்தன. அதன்படி ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் கல்வி வளாகத்தில் தொடர்ந்து தங்கியிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த ஆசிரியர் சங்கத்தினர் முடிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை ஆசிரியர்கள் ஏற்கவில்லை.

    தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து இங்குதான் இருப்போம் என்று கூறினார்கள். இதையடுத்து ஆசிரியர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    கலைந்துசெல்லாவிட்டால் கைது செய்வோம் என்று சொல்லி கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கினார்கள். இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்றாலும் போலீசார் கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் போட்டனர். சில ஆசிரியைகள் கண்ணீர் விட்டு கதறினார்கள். அவர்களுடன் இருந்த குழந்தைகளும் கதறின.

    என்றாலும் போலீசார் குண்டுகட்டாக ஆசிரியர்களை கைது செய்து அழைத்து சென்றனர். ஆசிரியர்களை அழைத்து செல்வதற்காக பஸ், வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களில் ஆசிரியர்கள் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.

    சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 500 பேர் பெண்கள் ஆவர். பிறகு அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். புதுப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    சிந்தாதிரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், ராயப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடங்களிலும் ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 7 இடங்களில் ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதால் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் இன்று அதிகாலை சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

    கைது செய்யப்பட்டாலும் தங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் ஆகியோர் கூறியதாவது:-

    அதிகாலையில் போலீஸ் படையை குவித்து போராட்ட களத்தில் இருந்த ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வெளியேற்றி உள்ளனர். இது ஜனநாயக கொலைக்கு சமம். எங்களை சிறையில் போடும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். கலைந்து போக மாட்டோம். சமுதாய கூடங்களிலும் எங்கள் போராட்டம் தொடரும். சாப்பிடாமல் இருப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×