செய்திகள்

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு

Published On 2017-09-12 08:29 GMT   |   Update On 2017-09-12 08:29 GMT
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைந்த பின்னர் அக்கட்சியில் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்து வெளியேறினர். மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.

இதனால், முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

மெஜாரிட்டிக்கு 4 எம்.எல்ஏ.க்கள் தேவைப் படுவதால் எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நேற்று முன்தினம் சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர், “எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இது தொடர்பாக கவர்னர் இதுவரை எந்த அறிவிப்பும்
வெளியிடவில்லை. கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதையடுத்து தி.மு.க. சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

கோர்ட்டு வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது:

ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி கவர்னரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால், கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம்.

சட்டசபையை கவர்னர் கூட்டினால் அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க கொண்டுவர தயாராகவே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இருந்தால் அவர் மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும்.

தி.மு.க ஒருபோதும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர எண்ணாது. ஜனநாயக முறைப்படியே ஆட்சியைப் பிடிப்போம். தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி எனக்கூறி விளம்பரம் தேடப்பார்க்கிறார் டி.டி.வி தினகரன், அவருக்கு விளம்பரம் தேடித்தர நான் விரும்பவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News