செய்திகள்

சசிகலாவை சந்தித்ததால் பதவி நீக்கம் கோரிய வழக்கு: அமைச்சர்கள் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2017-09-06 11:46 GMT   |   Update On 2017-09-06 11:46 GMT
சசிகலாவை சந்தித்ததால் பதவி நீக்கம் கோரிய வழக்கில் அமைச்சர்கள் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகனும், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினருமான ஆணழகன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலாவை, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சிறையில் சென்று பார்த்தனர்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாக அவர்கள் கூறினர். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த செயல்களுக்கு முதலமைச்சரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்களானது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது.

இதற்காக முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே நீதிமன்றம் தலையிட்டு நான் அளித்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவை கவர்னருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை தலைவருக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை வாங்க மறுத்ததால் அவரையும் இந்த வழக்கின் எதிர் மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தாங்கள் எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிராகவோ, அரசியலமைப்புச் சட்டத்திற்கு கூடுதலான அதிகாரங்களை பயன்படுத்தவோ இல்லை என தெரிவித்தார்.

அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News