செய்திகள்
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை படத்தில் காணலாம்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2017-08-19 09:20 GMT   |   Update On 2017-08-19 09:20 GMT
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் தென் பெண்ணையாறு ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென் பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 2 ஆயிரத்து 579 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இதையடுத்து அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 2 ஆயிரத்து 340 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் உள்ள தரைமட்ட பாலங்கள் மூழ்கியதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 41.49 அடி அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று மதியம் விநாடிக்கு 440 கன அடியாக குறைந்ததால் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 440 கன அடியாக குறைக்கப்பட்டது.

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.10 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1895 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே, தென் பெண்ணை ஆறு செல்லும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அணை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News