செய்திகள்

என் அதிகாரத்தை பறிக்க கவர்னருக்கு உரிமை இல்லை: நாராயணசாமி பேட்டி

Published On 2017-06-23 12:54 GMT   |   Update On 2017-06-23 12:54 GMT
நாராயணசாமிக்கு உள்ள நிதி அதிகாரத்தை கவர்னர் திடீரென பறித்துள்ளார். தன்னுடைய அதிகாரத்தை பறிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பிற மாநிலங்களில் உள்ள கவர்னரை விட புதுவை கவர்னருக்கு சற்று அதிகாரம் கூடுதலாக உள்ளது. இதனால் தனக்கே அதிகாரம் என கூறி கவர்னர் கிரண்பேடி அரசின் பணிகளில் தலையிட்டு வருகிறார்.

புதுவை யூனியன் பிரதேசம் என்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இரு தரப்பினரும் மத்திய அரசிடம் ஒருவருக்கொருவர் புகார் செய்து உள்ளனர். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு உள்ள நிதி அதிகாரத்தை கவர்னர் திடீரென பறித்துள்ளார். யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருக்கு ரூ.50 கோடியும், முதல்- அமைச்சருக்கு, ரூ.10 கோடி வரையும் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ளது.

தற்போது முதல்- அமைச்சரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவை புதுவை தலைமை செயலாளர் மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

இதனிடையே தன்னுடைய அதிகாரத்தை பறிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒருவருக்கு மத்திய அரசு கொடுத்த அதிகாரத்தை வைத்து அவர்கள் அடுத்தவர்களின் அதிகாரத்தை பறிக்க உரிமை இல்லை. கவர்னரின் செயல்பாடு தொடர்பாக நான் உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். கவர்னரின் உத்தரவு செல்லாது என்று தலைமை செயலாளரும் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

உள்துறை அமைச்சகம் எங்கள் கடிதங்களை ஏற்றுக் கொண்டது. கவர்னர், முதல்-அமைச்சருக்கென்று தனத்தனி நிதி அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு நேரடி அதிகாரம் இல்லாததால் எனக்குள்ள அதிகாரத்தில் தலையிடுகிறார்.

அவரது உத்தரவு செல்லாது. அதை நடை முறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும் போல் நிதி நிர்வாகத்தை நடத்துவோம். கவர்னர் தவறான தகவல்களால் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags:    

Similar News