இந்தியா

சஜனாவின் உடலுக்கு அசோக் நாயர் தீ மூட்டிய காட்சி.

இதயம் இடம் மாறியதால் நானும் மகனே! - கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Published On 2024-05-02 09:50 GMT   |   Update On 2024-05-02 10:29 GMT
  • புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.
  • சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது.

திருவனந்தபுரம்:

உடல் உறுப்பு தானம் பற்றி மக்களிடம் தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளைச்சாவு நிலைக்கு சென்ற பலரின் உடல் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினர், உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்குகிறார்கள்.

இதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதித்து அவதிப்படும் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், நுரையீரல் உள்ளிட்ட மனிதன் வாழ அவசியமான முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. அது மட்டுமின்றி எலும்புகள், எலும்பு மஜ்ஜை, தோல் உள்ளிட்டவைகளும் தானமாக வழங்கப்படுகின்றன.

இவ்வாறு உடல் உறுப்பு தானம் பெற்றதன் மூலம் மறுவாழ்வு பெறுபவர்கள், தங்களுக்கு உடல் உறுப்பு வழங்கியவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்துவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ஆனால் அதனையும் தாண்டி சில உணர்வு பூர்வமான சம்பவங்களும் அரங்கேறும்.

அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தனக்கு இதய தானம் வழங்கிய ஒரு வாலிபரின் தாய் இறந்து விட்ட நிலையில், அவருக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்குள் அனைத்தையும் மகன் ஸ்தானத்தில் இருந்து செய்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி ஷாஜி-சஜனா. இவர்களது மகன் விஷ்ணு, மகள் நந்தனா. இந்நிலையில் விஷ்ணு விபத்தில் சிக்கினார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு நிலைக்கு சென்றார்.

இதனால் அவரது குடும்பத்தினர் துடித்து போகினர். விஷ்ணு தங்களு டன் வாழப்போவதில்லை எனபதை நினைத்து மனம் உடைந்தனர். அந்த நேரத்தில் விஷ்ணுவின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவுக்கு வந்தனர். அதன்படி விஷ்ணுவின் சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தானமாக வழங்கப்பட்டது.

மேலும் உறுப்புகளை தானம் பெறுபவர்கள் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விஷ்ணுவின் குடும்பத்தினர் வைத்தனர். விஷ்ணுவின் உடல் உறுப்பு கள் 4 பேருக்கு பொருத்தப்பட்டன. விஷ்ணுவின் இதயம் பத்தினம்திட்டாவை சேர்ந்த அசோக் நாயர்(வயது44) என்பவருக்கு பொருத்தப்பட்டது.

அவர் அறுவை சிகிச்சை நாளில் விஷ்ணுவின் தாய் சஜனாவை சந்தித்தார். அப்போது தான், சஜனா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததை அசோக் நாயர் அறிந்துகொண்டார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையிலும், தனக்கு தன்னுடைய மகனின் இதயத்தை தானமாக வழங்கியதை நினைத்து அசோக் நாயர் நெகிழ்ந்து போனார்.

தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து வழக்கம்போல் வாழ தொடங்கிய அசோக் நாயர், சஜானாவை தவறாமல் சந்தித்து வந்தார். மேலும் தனக்கு இதயத்தை தானமாக வழங்கிய விஷ்ணு பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

 

சஜனா மற்றும் அவரது மகன் விஷ்ணு

அப்போது விஷ்ணுவுக்கு அவரது தாய் சஜனாவை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டார். இதனால் சஜனாவுக்கு தேவையான அனைத்தையும் செய்து மகனாகவே அசோக் நாயர் மாறினார். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.

சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது. சஜனாவுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டும் என்று விஷ்ணுவின் தந்தை கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் சஜனாவின் இறுதிச்சடங்கை மகன் ஸ்தானத்தில் இருந்து அசோக் நாயர் செய்தார். மேலும் சஜனாவின் உடலுக்கு அவரே தீ மூட்டினார். இது சஜனாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற விஷ்ணுவின் குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரையும் கண்கலங்க செய்தது. 

Tags:    

Similar News