விடுமுறை கிடைக்கல... கனடாவில் வசிக்கும் வாலிபருடன் இளம்பெண்ணுக்கு ஆன்லைனில் நடந்த நிச்சயதார்த்தம்
- வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் திருமணம் நடைபெறுகிறது.
- உடுப்பியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் உணவு முதல் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் நிலை உருவாகி விட்டது. இந்த நிலையில் வாலிபரும், இளம்பெண்ணும் ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். இது உலகம் டிஜிட்டல் மயமாகி வருவதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
பெங்களுரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள சக்ரபாவி கிராமத்தை சேர்ந்தவர் சுகாஷ். இவர் கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார். அதுபோல் உடுப்பயை சேர்ந்தவர் மேக்னா. இவர்கள் இருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி முடிவு செய்துள்ளனர். வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் திருமணம் நடைபெறுகிறது.
அதற்கு முன்பாக நேற்று இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடத்த இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். ஆனால் சுகாசுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதையடுத்து இரு குடும்பத்தினரும் ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி உடுப்பியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் மேடையில் மணமகள் மேக்னா அமர்ந்திருந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும், சுகாசின் பெற்றோரும், உறவினர்களும் அமர்ந்து இருந்தனர். ஆனால் மணமகன் சுகாஷ் கனடாவில் இருந்தபடி ஆன்லைனில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக திருமண மண்டபத்தில் பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த திரையில் சுகாஷ் தோன்றினார். அதையடுத்து சுகாஷ்- மேக்னாவுக்கு பிராமண சம்பிரதாய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தியா நேரத்திற்கும், கனடா நேரத்திற்கும் 12 மணி நேரம் வித்தியாசம் உள்ளது. உடுப்பியில் பகல் 12 மணிக்கு நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கனடாவில் நள்ளிரவு நேரத்தில் சுகாஷ் ஆன்லைனில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.