செய்திகள்

தாராபுரத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 150 பேர் கைது

Published On 2017-06-23 11:43 GMT   |   Update On 2017-06-23 11:43 GMT
தாராபுரத்தில் இன்று குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்னாக்கல்பாளைம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதிகாரிகள் உறுதியளித்ததுபோல் குடிநீர் வினியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறைகூறி வந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை 100 பெண்கள் உள்பட 150 பேர் காலிக்குடங்களுடன் தாராபுரம்- உடுமலை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லும் நேரம். அதனால் சாலை மறியலை கைவிடும்படி கேட்டார். ஆனால் பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்தனர். குறைந்த பட்சம் சாலை ஓரமாக அமர்ந்து போக்குவரத்துக்கு வழிவிடுங்கள் என்று கேட்டார்.

ஆனால் பொதுமக்கள் உடனடியாக லாரியில் தண்ணீர் வினியோகம் செய்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என்றனர். இதனையடுத்து 100 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News