செய்திகள்

மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மை போல் மாநில அரசு செயல்படுகிறது: கனிமொழி எம்.பி.பேச்சு

Published On 2017-06-18 08:26 GMT   |   Update On 2017-06-18 08:26 GMT
மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மை போல் மாநில அரசு செயல்படுகிறது என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.தாராசுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க.மாநில மகளிர் அணி அமைப்பாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சைக்கிள் மற்றும் தையல் எந்திரம் வழங்கி பேசியதாவது:-

வேறு யாரும் செய்ய முடியாததை செய்து காட்டுபவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறோம். அந்த வகையில் இதுவரை தோல்வியே இல்லாமல் 60 ஆண்டுகள் தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.

அவர் அரசியல்வாதி மட்டுமல்லாமல் சிறந்த மேடை பேச்சாளர். சட்ட மன்றத்தில் ஜனநாயகவாதி,சினிமாவில் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர், கவிதை ஆசிரியர்,கட்டுரையாளர்.

சட்ட மன்றத்தை மதிக்க கூடியவர் என பன்முகத் தன்மையை கொண்டவர். எந்தெந்த உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என நாம் போராடிக் கொண்டிருக்கிறோமோ அதற்கு நேர் மாறாக மத்திய அரசு செயல்படுகிறது.

தமிழ் நாட்டிலும் 6 ஆண்டுகளாக உள்ள ஆட்சி கரும்புள்ளியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியின் போது சட்டசபையில் எதிர் கேள்வி கேட்டவர்களை ஜனநாயக முறையில் பேச வைத்தவர் கருணாநிதி. ஆனால் அ.தி.மு.க.ஆட்சியில் எதிர் கட்சியினரை பேச விடுவதில்லை.

தமிழ்நாட்டில் யார் படித்து வேலைக்கு வர வேண்டும் என்று நினைத்தோமோ அதற்கு மாறாக மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது.

திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதால் தமிழகம் முன்னேறவில்லை என்று பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா தலைவர்களும் மீண்டும், மீண்டும் மேடை பேச்சுக்காக பொய் பிரசாரம் செய்கின்றனர்.

அகில இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாடு தான் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடைந்து உள்ளது. இன்னும் இதைவிட அதிகமாக முன்னேற வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க.போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உணவு, மொழி, வழிபாட்டு பழக்க வழக்கத்தில் மத்திய அரசுதலையிட விரும்புகிறது. ஆனால் இங்கிருக்கும் மாநில அரசு தலையாட்டி பொம்மையாக இருக்கிறது.

அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா யாரை நிறுத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம் என முதல்-அமைச்சர் பழனிச்சாமி கூறுகிறார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவக ஓட்டு போடுவதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் தரவேண்டிய அவல நிலை உள்ளது. இது போன்ற அரசு நமக்கு தேவையா? தமிழ் நாட்டுக்கு தனி கவர்னர் கூட இல்லை.

இந்நிலை மாற வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். மு.க. ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களுக்குகூட மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது.

வரும் தேர்தலில் இவற்றை எல்லாம் மனதில் வைத்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

Tags:    

Similar News