செய்திகள்

ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க எதிர்ப்பு தெரிவிப்பதா?: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கண்டனம்

Published On 2017-05-27 11:03 GMT   |   Update On 2017-05-27 11:03 GMT
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தாலிக்கு தங்கம் - திருமண உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார்.

மாவட்டத்தில் உள்ள 350 பெண்களுக்கு ரூ.2.14 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகைகளை அமைச்சர் செல்லூர்ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் அம்மா தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னதமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். 7½ கோடி மக்களின் இதயங்களில் அம்மா வீற்றிருக்கிறார். ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. இங்கு பேசுகையில் சாதனை செய்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மக்கள் நலனுக்காக கடைசிவரை வாழ்ந்தவர். அவர் எந்தவித விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர். ஜெயலலிதாவை பிரதமர் மோடியே புகழ்ந்து பேசியுள்ளார். அவரின் ஆசியோடுதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.

தமிழக மக்களின் இதயங்களில் இடம்பெற்ற ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 8.79 லட்சம் பேருக்கு ரூ.2960 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை. அந்த இயக்கம் இங்கு வந்துள்ள உங்களிடம் தெரிகிறது.

தொட்டில் குழந்தை திட்டமும் ஜெயலலிதா கொண்டு வந்ததுதான். இதன்மூலம் 705 ஆண் சிசுக்களும், 448 பெண் சிசுக்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சாதனை திட்டங்களை தந்த ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பதற்கு மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார். இதற்காக அவர் இழிவான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.

தமிழ் மண் இருக்கும் வரை, தமிழர்கள் இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் நிலைத்து இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News