செய்திகள்

தங்கம்தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு: கூடுதல் அரசு வக்கீலை நியமித்ததற்கு இடைக்கால தடை

Published On 2017-05-26 11:41 GMT   |   Update On 2017-05-26 11:41 GMT
தங்கம்தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில் கூடுதல் அரசு வக்கீலை நியமித்ததற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

கடந்த 2006-2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் மீதான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு சார்பாக வக்கீல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மற்றொரு அரசு வக்கீலும் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தங்கம் தென்னரசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கில் ஆஜராக ஏற்கனவே அரசின் சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநில அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராகும் வகையில் பொதுத்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே வழக்கிற்கு 2 அரசு வக்கீல்களை நியமிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே பொதுத்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்றும், 2-வது நாளாக இன்றும் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நடந்தது. அப்போது பொதுத்துறை முதன்மை செயலாளர் அரசு வக்கீலை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News