தமிழ்நாடு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 19-ந்தேதி வரை கன மழை: 20 செ.மீ. வரை பெய்யும் என்று எச்சரிக்கை

Published On 2024-05-16 05:40 GMT   |   Update On 2024-05-16 05:40 GMT
  • தமிழகத்தில் நேற்று உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
  • தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பெய்து உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது.

இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நீடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிக பட்சமாக 20 செ.மீ. வரை மழை பெய்யும். இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு 'அலர்ட்' விடப்பட்டுள்ளது. மேலும் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்படும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி வரை 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும் நாளையும் இந்த 26 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (17-ந்தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய 26 மாவட்டங்களில் நாளை (17-ந்தேதி) கனமழை பெய்யும்.

வருகிற 18-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். சுமார் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அன்று இந்த 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வருகிற 19-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் மற்ற மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நாள்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நாட்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பெய்து உள்ளது. மன்னார்குடியில் 13.1 செ.மீ. மழையும், அதிராம்பட்டினத்தில் 10.3 செ.மீ. மழையும் பெய்து உள்ளது. மேலும் சோத்துப்பாறை அணையில் 8.7 செ.மீ. மழையும், வேதாரண்யத்தில் 7.28 செ.மீ. மழையும், திருத்துறைப்பூண்டியில் 6.2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

கனமழை காரணமாக தமிழகம், புதுவையில் இயல்பைவிட குறைவாக வெப்பநிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி வரை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளது.

சென்னையில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மற்றும் இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், சூளைமேடு, மேற்கு மாம்பலம், தி.நகர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, போரூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மழை பெய்தது.

மேலும் பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், வண்டலூர், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், அச்சரப்பாக்கம், செய்யூர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது.

Tags:    

Similar News