தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: கூடுதல் அதிகாரிகள் தனிப்படையில் சேர்ப்பு

Published On 2024-05-16 05:45 GMT   |   Update On 2024-05-16 05:45 GMT
  • 6 வகையான ஆய்வறிக்கைகளின் முடிவுக்காக நெல்லை மாவட்ட போலீசார் காத்திருக்கின்றனர்.
  • தனிப்படையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பல அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திசையன்விளை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

பல்வேறு தடயங்கள் சிக்கி உள்ள நிலையிலும் அவர் மரணத்திற்கு காரணம் என்ன என்பது போலீசாருக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையை 10 தனிப்படையினர் மேற்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு படையினரும் ஒவ்வொரு கோணத்தில் அரசியல், தொழில், குடும்பத்தினர், உறவினர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

தற்போது வரை உறுதியான முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் இறுதியாக டி.என்.ஏ. மாதிரி, உடல் எலும்பு பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட 6 வகையான ஆய்வறிக்கைகளின் முடிவுக்காக நெல்லை மாவட்ட போலீசார் காத்திருக்கின்றனர்.

அந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும். அதன்பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பதையே போலீசார் உறுதி செய்வார்கள்.

இந்த நிலையில் இதுவரை அமைத்திருந்த தனிப்படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் இதுவரை நடைபெற்ற முக்கியமான சில கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட தேடிக்கண்டுபிடித்து கைது செய்த போலீஸ் அதிகாரிகளை கொண்டு புதிதாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த தனிப்படையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பல அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கி விட்டனர்.

திசையன்விளைக்கு 4 ஜீப்களில் புறப்பட்டு சென்ற அந்த தனிப்படை முதலாவதாக நேற்று மாலையில் ஜெயக்குமாரின் உறவினர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடல் கிடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர். இன்றும் காலை முதலே விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News