திண்டுக்கல் அறிவியல் கண்காட்சியில் சிறிய ரக விமான மாதிரியை தயாரித்து பறக்கவிட்ட மாணவன்
- தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டு பரிசுகளை பெற்றுள்ளேன்.
- தெர்மாகோல் அட்டை, குடை கம்பி, ஐஸ் குச்சி, சிறிய மூங்கில் குச்சி, ட்ரான்ஸ்மீட்டர், ரிசீவர் கொண்டு தயாரித்துள்ளேன்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்த நல்லையா நடராஜன் மகன் பழனிவேல் ராஜன் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சிறிய ரக விதை நடும் விமானத்தை தயாரித்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பறக்க விட்டார். இது அங்கு வந்து பார்வையிட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை அதிகம் கவர்ந்தது.
இதுகுறித்து மாணவர் பழனிவேல் ராஜன் கூறுகையில், சிறு வயதிலிருந்தே விமானம் மற்றும் அது பறப்பது பற்றி ஆர்வங்கள் எழுந்து வந்தது. 9ம் வகுப்பு படிக்கும் போது இதில் ஆர்வம் அதிகரித்தது. கொரோனா காலத்தில் செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே படிக்கும் நிலை உருவானது. இதனால் செல்போன் பயன்படுத்துவது அதிகமானது. அப்போது யூடியூப் மூலம் விமானம் குறித்த பல தகவல்களை அறிந்து சேகரித்தேன். அதை தொடர்ந்து விமானம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
இதுவரை 15 சிறியரக விமான மாதிரிகளை தயாரித்து பறக்க விட்டு உள்ளேன். தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டு பரிசுகளை பெற்றுள்ளேன்.
தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியில் விதை நடும் சிறிய ரக விமானம் தயாரித்து பறக்க விட்டேன். தெர்மாகோல் அட்டை, குடை கம்பி, ஐஸ் குச்சி, சிறிய மூங்கில் குச்சி, ட்ரான்ஸ்மீட்டர், ரிசீவர் கொண்டு தயாரித்துள்ளேன். இதில் டிரான்ஸ் மீட்டர், ரிசீவர் மட்டும் ஆன்லைன் மூலம் வாங்கி பயன்படுத்தியுள்ளேன். ரூ.12 ஆயிரம் செலவில் ரிமோட்டுடன், 1850 மில்லியன் ஆம்ஸ் திறன் கொண்ட பேட்டரி, 850 கிராம் எடையுடன் 25 நிமிடம் வானில் பறக்கும் வகையில் சிறிய ரக விமான மாதிரியை தயாரித்தேன்.
அழியும் காடுகளை மீட்டு எடுக்க, விதை பந்து வீசும் வகையில் இதனை வடிவமைத்துள்ளேன். ஏரோநாட்டிக்கல் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். கணித கம்ப்யூட்டர் அறிவியல் பாட பிரிவு எடுத்து படித்து வருகிறேன். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், யூடியூப் பார்த்து செய்து முடித்துள்ளேன் என்றார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.