இந்தியா

ஆந்திர மாநிலத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டி- திருமாவளவன் பிரசாரம்

Published On 2024-05-08 06:22 GMT   |   Update On 2024-05-08 06:22 GMT
  • தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.
  • வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

இந்த கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

சித்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த திருமாவளவன் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாநிலத் தலைவர் சர்மிளாவை சந்தித்தோம் ஆனால் கூட்டணி அமையவில்லை.

விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

வருகிற 9-ந் தேதி நெல்லூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜுவை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறேன். 11-ந் தேதி மும்பை சென்று சிவசேனா கட்சி வேட்பாளர் அணில் தயா சாயை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

மோடியை 3-வது முறையாக பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் இந்திய அளவில் பா.ஜ.க. மீது அதிருப்தி மேலோங்கி உள்ளது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News