இந்தியா

கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

Published On 2023-03-03 04:41 GMT   |   Update On 2023-03-03 06:33 GMT
  • மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன.
  • நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

புதுடெல்லி:

தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தெலுங்கானா தலைமைச்செயலாளர் ஏ.சாந்திகுமார் சார்பில் வக்கீல் உதய்குமார் சாகர் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்பட 10 மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி கவர்னர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News