இந்தியா

ஜனநாயகத்தை அழிக்க சதி செய்த காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- பிரதமர் மோடி

Published On 2024-04-28 08:24 GMT   |   Update On 2024-04-28 08:24 GMT
  • இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
  • தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

பெங்களூரு:

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலமாக மாறியுள்ளது. இதை நினைத்து அனைவரும் பெருமைபடுவார்கள். ஆனால் இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.

தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி செய்தது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் உதவி பெற்றுள்ளது.

நமது ராஜா, மகாராஜாக்களை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) அவமதிக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஆளுமைகளை அவமதித்துள்ளார். நாம் அனைவரும் பெருமைபடும் மைசூர் அரச குடும்பத்தினர் பங்களிப்பு அவருக்கு தெரியாதா?

ஆனால் நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாதுஷாக்கள் செய்த அட்டூழியங்களை பற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.


நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள் காங்கிரசுக்கு நினைவில்லை. அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசும் கட்சியுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி அமைக்கலாம்.

நமது புனித தலங்களை அழித்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், மக்களை கொன்றவர்கள், பசுக்களை கொன்றவர்கள் பற்றி எல்லாம் அவர்கள் பேசுவதில்லை.

மக்களின் சொத்துக்களை 55 சதவீதம் பறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஹூப்ளியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் சமாதானத்துக்கு முன்னுரிமை அளித்தது. நேஹா போன்ற எங்கள் மகள்களின் உயிருக்கு மதிப்பில்லை. அவர்களுக்கு கவலை எல்லாம் அவர்களின் வாக்கு வங்கி மட்டுமே.

பா.ஜனதா அரசு குற்றவியல் நிதி அமைப்பின் காலனித்துவ சட்டங்களை நீக்கியது. பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை தொடர்ந்து உத்தரகன்னடா, தாவன கெரே, பாகல் கோட்டை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதி களில் 14 இடங்களுக்கு கடந்த 26-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு மே மாதம் 7-ந் தேதி நடக்கிறது. 

Tags:    

Similar News