செய்திகள்
சச்சின் பைலட்

இன்னொரு மாநிலத்தை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை... சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கொடுக்க உள்ளதாக தகவல்

Published On 2020-07-13 04:30 GMT   |   Update On 2020-07-13 04:30 GMT
உட்கட்சி பூசல் காரணமாக கர்நாடகா, மத்திய பிரதேசத்தைப் போன்று இன்னொரு மாநிலத்திலும் ஆட்சியை இழக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், முதல்வர் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார். 

மாநில அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடப்பதாக கூறிய அவர், இந்த சதியின் பின்னணியில் பா.ஜனதா தேசிய தலைமை இருப்பதாகவும் புகார் கூறினார். 

அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சச்சின் பைலட்டை ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்துள்ளார். 

இதற்கிடையே இன்று காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தைப் போன்று இன்னொரு மாநிலத்தையும் இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை. சச்சின் பைலட்டை எப்படியாவது சமாதானம் செய்து ஆட்சியை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சச்சின் பைலட் இன்று பாஜக தலைவர் ஜே.ப. நட்டாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்று அவர்களுக்கிடையே எந்த சந்திப்பும் நடைபெறுவதாக உறுதி செய்யப்படவில்லை.

பிரச்சினையை தீர்ப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று இரவு ராஜஸ்தான் வந்தனர். அவர்கள் அளித்த பேட்டியின்போது, அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு 109 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பதாக கூறினர். கொறடாவின் உத்தரவை மீறி,  காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
Tags:    

Similar News