செய்திகள்
வேணுகோபாலை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்த போது எடுத்த படம்.

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை முயற்சி: நேரில் நலம் விசாரித்த குமாரசாமி

Published On 2019-01-12 02:27 GMT   |   Update On 2019-01-12 02:27 GMT
செல்போன் பயன்படுத்த கூடாது என பெற்றோர் கண்டித்ததால் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரை, முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #Kumaraswamy
பெங்களூரு :

பெங்களூரு மைசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகவாரா முதல் எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலையில் எலச்சனஹள்ளியில் இருந்து நாகவாராவுக்கு ஒரு மெட்ரோ ரெயில் புறப்பட்டது. காலை 11.15 மணியளவில் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு, அந்த ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர். அதுபோல, ஒரு வாலிபரும் ரெயிலில் ஏறுவதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த வாலிபர் திடீரென்று ஓடிப்போய் ரெயில் முன்பு பாய்ந்தார். இதை பார்த்து அங்கிருந்த பயணிகள், மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் ரெயில் முன்பு வாலிபர் பாய்ந்ததை கவனித்த டிரைவர், உடனடியாக மெட்ரோ ரெயிலை நிறுத்தினார். அத்துடன் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சுதாரித்து கொண்டு மெட்ரோ ரெயில் இயக்கத்திற்கு பயன்படும் மின் இணைப்பை துண்டித்தனர்.

அதன்பிறகு, மெட்ரோ ரெயிலை டிரைவர் பின்னோக்கி எடுத்தார். அப்போது தண்டவாளத்திற்கு நடுவே தலையில் பலத்த காயங்களுடன் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அந்த வாலிபரை மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் மீட்டனர். பின்னர் அவர், நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் வி.வி.புரம் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து, மெட்ரோ ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பசவனகுடியை சேர்ந்த வேணுகோபால் (வயது 18) என்று தெரியவந்துள்ளது. 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அதன்பிறகு பள்ளிக்கு செல்லாமல் பெற்றோர் நடத்தி வரும் தையல்கடையில் வேணுகோபால் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நேரத்தில் வேணுகோபால் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் செல்போன் பயன்படுத்துவதை குறைக்கும்படி பெற்றோர் புத்திமதி கூறியுள்ளனர்.

வேணுகோபால் மெட்ரோ ரெயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதை படத்தில் காணலாம். இது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.


நேற்று முன்தினம் இரவும் செல்போன் பயன்படுத்த கூடாது என்று வேணுகோபாலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர் பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக மனம் உடைந்த அவர், இன்று (அதாவது நேற்று) காலையில் பசவனகுடி நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மெட்ரோ ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வேணுகோபால், அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்திற்கு நடுவே விழுந்திருந்தார். இதனால் அவரது தலையில் மட்டும் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்க பயன்படும் மின்சாரத்தை ஊழியர்கள் உடனடியாக துண்டித்திருந்ததால் மின்சாரம் தாக்கி பலியாகாமல் வேணுகோபால் உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் நாகவாரா முதல் எலச்சனஹள்ளி இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை அரை மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் மெட்ரோ ரெயில் முன்பு வாலிபர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது இதுவே முதல் முறை ஆகும். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்று நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வேணுகோபாலை நேற்று மாலையில் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் வேணு கோபாலுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு குமாரசாமி அறிவுறுத்தினார்.

அத்துடன் வேணுகோபால் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் முதல்-மந்திரி குமாரசாமி கேட்டு அறிந்து கொண்டார். மேலும் வேணுகோபாலின் பெற்றோருக்கு அவர் ஆறுதலும் கூறினார். பின்னர் நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து முதல்-மந்திரி குமாரசாமி புறப்பட்டு சென்றார். #Kumaraswamy
Tags:    

Similar News