செய்திகள்

தம்பட்டம் அடிக்காமல் இந்த நாட்டை முன்னேற்றியவர் - மன்மோகன் சிங்குக்கு சோனியா புகழாரம்

Published On 2018-11-19 16:25 GMT   |   Update On 2018-11-19 16:25 GMT
நான் சாதித்தேன், நான் சாதித்தேன் என்று தம்பட்டம் அடிக்காமல் இந்தியாவை முன்னேற்றியதுடன் ஒரு பிரதமராக மிகவும் தன்னடக்கத்துடன் ஆட்சி செய்தவர் மன்மோகன் சிங் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். #SoniaGandhi #ManmohanSingh #ManmohanSinghhumility
புதுடெல்லி:

மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் டெல்லியில் அவரது குடும்பத்தின் சார்பில் இந்திரா காந்தி பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இந்திரா காந்தி அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான பணிகளுக்காக உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், மனிதநேய நோக்கத்துடன் பொதுச் சேவையாற்றுபவர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வகையில், 2017-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வானார்.  இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரும்பணியாற்றிதற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்தநாளான இன்று மாலை டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் அவருக்கு இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் இந்த விருதினை அவருக்கு வழங்கி சிறப்பித்தார். 

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பங்கேற்று மன்மோகன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவைகளை புகழ்ந்து பேசினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ‘மன்மோகன் சிங்கின் செயல்திறனை பார்க்கும்போது அவர் பிறக்கும்போதே மிகப்பெரிய அறிவாளியாக பிறந்தவர் என்பது தெரிகிறது’ என்று புகழாரம் சூட்டினார்.

நாடு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றார். 

பத்தாண்டு காலம் இந்த நாட்டின் பிரதமராக இருந்த அவரது ஆட்சியில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது என்றும் சோனியா குறிப்பிட்டார்.

அவரது ஆட்சிக்காலத்தில் உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்தார். இதற்காக அவர், நான்தான் செய்தேன். நான்தான் செய்தேன் என்று எந்த தம்பட்டமும் அடித்து கொண்டதில்லை. மிகவும் எளிமையாகவும், தன்னடக்கத்துடனும் அவர் இருந்தார். 

தனது சாதனைகள் எதற்கும் அவர் உரிமை கோரவில்லை. மாறாக, தனது செயல்களால் தன்னைப்பற்றி பிறர் பேசும் வகையில் இந்த நாட்டுக்காக அவர் உழைத்துள்ளார் எனவும் சோனியா காந்தி சுட்டிக் காட்டினார். #SoniaGandhi #ManmohanSingh #ManmohanSinghhumility
Tags:    

Similar News