செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சனிக்கிழமை மோடி பிரசாரம் தொடங்குகிறார்

Published On 2018-07-12 09:26 GMT   |   Update On 2018-07-12 09:26 GMT
பாராளுமன்ற தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறி வைத்து மோடி பிரசாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக சனிக்கிழமை மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடியும் மக்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார்.

இந்த தடவையும் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறி வைத்து பிரசாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது 4 மெகா பிரசார கூட்டங்களில் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த மாத இறுதிக்குள் 20 கூட்டங்களில் அவர் பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்தை பரபரப்பாக பிரபலப்படுத்த பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதற்காக பிரதமர் அலுவலகம் அனைத்து அமைச்சகத்துக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் அடுத்த 6 மாதத்தில் எந்தெந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. எந்தெந்த திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது? என்ற விவரத்தை கேட்டு உள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைய புதிய நலத்திட்டங்களை அறிமுகம் செய்யவும் பா.ஜ.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. #BJP #Modi
Tags:    

Similar News