செய்திகள்

ஒக்கி புயலால் 433 தமிழக மீனவர்களை காணவில்லை - தேடும் பணி தீவிரம்: உள்துறை அமைச்சகம்

Published On 2017-12-14 10:59 GMT   |   Update On 2017-12-14 10:59 GMT
ஒக்கி புயலின் தாக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 433 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தென் பகுதியில் ஒக்கி புயல் தாக்கியதால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிற மாநிலங்களில் கரைசேர்ந்துள்ள நிலையில், இன்னும் ஏராளமான மீனவர்களைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மீனவர்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுகிறது.

இந்நிலையில், 433 தமிழக மீனவர்கள் உள்பட 619 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.


மத்திய அரசு உதவியுடன் மீட்பு பணி முழுவீச்சில் நடைபெறுவதாக டெல்லியில்  தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

‘புயலால் மாயமான அனைத்து மீனவ்களையும் மீட்க வேண்டும் என தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுகிறது. கடலில் தற்போது சீரான நிலை ஏற்பட்டுள்ளதால் மாயமான மீனவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என நம்புகிறோம். புயலால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் முழுமையான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்’ என்றும் ஜெயக்குமார் கூறினார்.

புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதற்கிடையே ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.1843 கோடி வழங்கும்படி மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுள்ளது.
Tags:    

Similar News