செய்திகள்

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

Published On 2017-12-13 12:07 GMT   |   Update On 2017-12-13 12:07 GMT
வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. விசாரணையின்போது, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மத்திய நிதியமைச்சம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் நீட்டிக்கப்பட்ட தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.



இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற 2018 மார்ச் 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க முடியாது. 2018 பிப்ரவரி 6-ந்தேதி கடைசி நாள் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News