செய்திகள்

ஊதியத்தை உயர்த்தக்கோரிய பரிந்துரை நிலுவை - மத்திய அரசு அதிகாரிகளை விட ஜனாதிபதிக்கு சம்பளம் குறைவு

Published On 2017-11-20 01:26 GMT   |   Update On 2017-11-20 01:26 GMT
சம்பளத்தை உயர்த்தும்படி கோரிய பரிந்துரை நிலுவையில் இருப்பதால் மத்திய அரசின் உயர் அதிகாரிகளை விட ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் குறைவான சம்பளம் பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி:

சம்பளத்தை உயர்த்தும்படி கோரிய பரிந்துரை நிலுவையில் இருப்பதால் மத்திய அரசின் உயர் அதிகாரிகளை விட ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் குறைவான சம்பளம் பெற்று வருகின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய பதவிகளை வகிப்பவர்கள் ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் ஆவர். ஆனால் இவர்கள் மத்திய அரசின் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவாக மாதச் சம்பளம் பெறுவது தெரியவந்துள்ளது.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல், நாட்டின் உயர் அதிகாரிகள் பொறுப்பு வகிப்போரில் மத்திய மந்திரி சபையின் செயலாளர் மாதத்துக்கு ரூ.2½ லட்சம் சம்பளம் பெற்று வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக மத்திய அரசின் செயலாளர் ரூ.2¼ லட்சம் சம்பளம் பெறுகிறார்.

ஆனால் இவர்களை விட ஜனாதிபதிக்கும், துணை ஜனாதிபதிக்கும் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது. தற்போது ஜனாதிபதி மாதச் சம்பளமாக ரூ.1½ லட்சம், துணை ஜனாதிபதி ரூ.1¼ லட்சம், மாநில கவர்னர்கள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதற்கு, மத்திய மந்திரி சபையின் ஒப்புதலை பெற தனது பரிந்துரையை மந்திரிசபையின் செயலகத்துக்கு அனுப்பி வைத்து இருந்தது. ஆனால் இந்த பரிந்துரை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள் வாங்கும் சம்பளத்தை விடவும் மிக குறைவாக சம்பளம் பெறுவதுதான். இவர்கள் மூவரும் மாதம் தலா ரூ.2¼ லட்சம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு சம்பளத்தை உயர்த்தும்படி கோரிய பரிந்துரை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்யப்படவேண்டும். அதன்பிறகே அவர்களுக்கு புதிய சம்பள விகிதம் நடைமுறைக்கு வரும்” என்றார்.

பரிந்துரைக்கப்பட்ட சம்பள விகிதத்தில் ஜனாதிபதிக்கு மாதச் சம்பளம் ரூ.5 லட்சமும், துணை ஜனாதிபதிக்கு ரூ.3½ லட்சம், கவர்னர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கடைசியாக 2008-ம் ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு ஜனாதிபதி ரூ.50 ஆயிரம், துணை ஜனாதிபதி ரூ.40 ஆயிரம், மாநில கவர்னர்கள் ரூ.36 ஆயிரம் மாதச் சம்பளமாக பெற்று வந்தனர். 
Tags:    

Similar News