செய்திகள்

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் ஜனாதிபதி உறவினர் சுயேட்சையாக போட்டி

Published On 2017-11-10 06:58 GMT   |   Update On 2017-11-10 06:58 GMT
உத்தரபிரதேச மாநில உள்ளாட்சி தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உறவினர் தீபா கோவிந்த் பாரதிய ஜனதா வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக வருகிற 22, 26 மற்றும் 29-ந்தேதிகளில் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 1-ந்தேதி நடக்கிறது.

உ.பி.யில் பா.ஜனதா அரசு பதவியேற்ற பிறகு நடக்கும் மிகப்பெரிய பரிசோதனை இந்த தேர்தல் ஆகும்.

உள்ளாட்சி தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உறவினர் தீபா கோவிந்த் போட்டியிட முடிவு செய்தார்.

கான்பூர் தெதாத் மாவட்டத்தில் உள்ள ஜிதான்ஜர்நகர் பலிகா நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் பாரதிய ஜனதா கட்சியிடம் டிக்கெட் கேட்டார். ஆனால் உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா அவருக்கு ‘சீட்’ கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் தீபா கோவிந்த் ஆத்திரம் அடைந்தார்.


அவர் பா.ஜனதா அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

சுயேட்சையாக போட்டியிடுவது குறித்து தீபா கோவிந்த கூறும்போது, “எனக்கு இருக்கும் ஆதரவை நிருபிக்க சுயேட்சையாக போட்டியிடுகிறேன். எனது மாமனார் ராம்நாத் கோவிந்தின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை. இந்த தேர்தல் மூலம் எனது பலம் தெரியவரும்” என்றார்.

இதே போல ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மற்றொரு உறவினரான வித்யாவதியும் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட டிக்கெட் கேட்டார். அவருக்கு பாரதிய ஜனதா டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டது. ஆனால் அவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவில்லை.
Tags:    

Similar News