செய்திகள்

நான்கு மத்திய மந்திரிகளை பதவி நீக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2017-11-05 05:43 GMT   |   Update On 2017-11-05 05:43 GMT
தனியார் நிறுவனங்கள் மூலம் ஆதாயம் தேடும் 4 மத்திய மந்திரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் சவுர்யா தோவால்.

இவர் இந்தியா பவுண்டேசன் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் அந்த நிறுவனத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாரமன், சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்கா, எம்.ஜே. அக்பர் ஆகிய 4 பேரும் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்த தன்னார்வ நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் நிதி வருகிறது. இந்த உள்நாட்டு, சர்வதேச நிறுவனங்களில் பெரும்பாலானது மத்திய அரசுடன் தொடர்பு வைத்திருப்பவையாகும்.

மேலும் இந்த தன்னார்வ நிறுவனம் 35 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பொருளதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்புகளும் (ஓ.இ.சி.டி.), ஆகிய நாடுகளுக்கும் இடையே நிதி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் மூலமாக 4 மத்திய மந்திரிகளும், அஜித்தோவால் மகனும் ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிய ஜனதாவை தாக்கியுள்ளார்.



டுவிட்டரில் அவர் கூறும்போது, “அமித்ஷா மகனுடனான தன்னார்வ நிறுவனத்தின் வெற்றியை அடுத்து பாரதிய ஜனதாவின் அடுத்த அஜித் சவுர்யா” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ள 4 மத்திய மந்திரிகளையும் பிரதமர் மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



மத்திய மந்திரி பதவியில் இருக்கும் ஒருவர் தன்னார்வ அமைப்பில் இயக்குனராக செயல்பட கூடாது. சட்டப்படி இந்த குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே 4 மத்திய மந்திரிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தேசிய குழு தலைவர் பதவியில் இருந்தபோது பாரதிய ஜனதா பதவி விலக கட்டாயப்படுத்தியது. அவர் அப்போது பதவி விலகியதை பாரதிய ஜனதா தற்போது உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வி‌ஷயத்தில் பிரதமர் மோடி தற்போது மவுனமாக இருப்பது ஏன்?

இவ்வாறு கபில்சிபில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News