செய்திகள்

செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை: அமித்ஷாவுக்கு மாயாவதி பதிலடி

Published On 2017-10-12 09:38 GMT   |   Update On 2017-10-12 09:38 GMT
நாட்டுக்கு பேசக்கூடிய பிரதமர் தேவை இல்லை. சிறப்பாக செயல்படக்கூடிய பிரதமரே தேவை என அமித்ஷாவுக்கு மாயாவதி பதில் அளித்துள்ளார்.
லக்னோ:

பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா அமேதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரசையும், அதன் தலைவர்களை பற்றியும் கடுமையாக விமர்சித்தார்.

பா.ஜனதா ஆட்சியில் நாட்டுக்கு என்ன பலன் கிடைத்து இருக்கிறது? என்று ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு அக்கூட்டத்தின் மூலம் அமித்ஷா பதில் அளித்தார். பேசக்கூடிய பிரதமரை பா.ஜனதா நாட்டுக்கு கொடுத்துள்ளது என்றார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை விமர்சிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ஒரு தரப்புக்கு சாதகமாகவே பேசுகிறார். அரசு ஊடகங்களை தனது சுய விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறார். அவரது தலைமையிலான மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது.

நாட்டில் இத்தகைய சூழல் இருந்து வரும் நிலையில் நன்றாக பேசக்கூடிய பிரதமராக மோடி இருக்கிறார் என்று அமித்ஷா புகழாரம் சூட்டுகிறார். நாட்டுக்கு பேசக்கூடிய பிரதமர் தேவை இல்லை. சிறப்பாக செயல்படக்கூடிய பிரதமரே தேவை.

மத்திய அரசை போலவே உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் மாநில பா.ஜனதா அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.

மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை இதுவரை இல்லாத அளவுக்கு சீர்குலைந்து இருக்கிறது. இதை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களில் சிலரே குற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர்களாக உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News