செய்திகள்

சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம் - உ.பி. அரசு நடவடிக்கையால் புதிய சர்ச்சை

Published On 2017-10-02 19:45 GMT   |   Update On 2017-10-02 19:45 GMT
சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து உலக அதிசயமாக திகழும் தாஜ்மகாலை உத்தரபிரதேச அரசு நீக்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் சுற்றுலா தலங்கள் அடங்கிய புதிய புத்தகத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், உலக அதிசயமாக திகழும் தாஜ்மகால் இடம்பெறவில்லை.

இது, பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. உத்தரபிரதேச அரசு மத கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும், இதுபற்றி அரசு தரப்பில் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்பு, நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் உரையின்போது கூட ‘உத்தரபிரதேசத்தின் கலாசார பாரம்பரியம்’ என்ற தலைப்பிலான பகுதியில் தாஜ்மகால் இடம்பெறவில்லை.

மேலும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘உலக தலைவர்களுக்கு தாஜ்மகாலின் மாதிரியை இந்திய தலைவர்கள் பரிசாக கொடுப்பது இந்திய கலாசாரத்தை சேர்ந்தது அல்ல’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வரிசையில், உ.பி. சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை அவரது அரசு நீக்கி உள்ளது. காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மகாலை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News