செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவத்தினர் 4-வது நாளாக எல்லையில் அத்துமீறி தாக்குதல்

Published On 2017-09-16 07:12 GMT   |   Update On 2017-09-16 07:12 GMT
ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் கடந்த சில தினங்களாக திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் பிஜேந்தர் பகதூர் பலியானார்.

இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளை நோக்கி கையெறி குண்டுகளை வீசினர். சாய், டிரேவா, ஜபோலி ஆகிய கிராமங்களில் உள்ள ஒரு கோயில் மற்றும் இரண்டு வீடுகள் சேதமாகின. அங்கிருந்த கால்நடைகளும் இறந்துள்ளன.

இதுகுறித்து பாதுகாப்பு படையினர் கூறுகையில், சமீப காலமாக பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை 285 தடவை எல்லையை தாண்டி அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News