செய்திகள்

தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டை தடைசெய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி கடிதம்

Published On 2017-08-12 23:46 GMT   |   Update On 2017-08-12 23:46 GMT
தற்கொலைக்கு தூண்டும் ‘நீல திமிங்கலம்’ (‘புளூ வேல்’) விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்
திருவனந்தபுரம்:

கம்ப்யூட்டரில் ‘ஆன்லைன்’ மூலம் விளையாடப்படும் ‘நீல திமிங்கலம்’ (‘புளூ வேல்’) என்ற விபரீத விளையாட்டு சிறுவர்கள், இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த விளையாட்டின் போது ‘ஆன்லைன்’ மூலம் விடுக்கப்படும் வினோத கட்டளைகளை ஏற்று பல்வேறு நாடுகளில் சிறுவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்கள் ஏற்கனவே நடந்து உள்ளன.

இந்த விளையாட்டை விளையாடிய மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



இந்த நிலையில், ஆபத்தான இந்த விளையாட்டை மத்திய அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றுகோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

இந்த விளையாட்டு ‘வீடியோ கேம்’ அல்ல என்றும், இதில் கலந்துகொள்பவர்கள் எங்கிருந்தோ ஒருவர் பிறப்பிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும், இறுதியில் தற்கொலை செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் நிலை உள்ளதாகவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார். பொன்னான உயிர்களை காப்பாற்ற இந்த விளையாட்டுக்கு தடை விதிப்பது மிகவும் அவசியம் என்றும் கடிதத்தில் அவர் கூறி இருக்கிறார். 
Tags:    

Similar News