செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி: குஜராத்தில் உயிரிழப்பு 111 ஆக உயர்ந்தது

Published On 2017-07-26 15:01 GMT   |   Update On 2017-07-26 15:01 GMT
குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 111 ஆக அதிகரித்துள்ளது.
அகமதாபாத்:

வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டி உள்ள மாநிலங்களில் கனமழை பெய்கிறது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

குஜராத்தில் பனாஸ்காந்தா, சாபார்காந்தா, ஆனந்த், பதான் மற்றும் வால்சாத் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, துணை ராணுவம் மற்றும் ராணுவம் தீவிரமாக இறங்கி உள்ளது.

பனாஸ்காந்தா மாவட்டத்தில் வெள்ளநீர் வடிந்துவரும் நிலையில் காரியா கிராமத்தில் பெரும் சேதம் நேரிட்டது தெரியவந்து உள்ளது. அந்த கிராமத்தில் பனாஸ் நதியின் கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேரது சடலம் மீட்கப்பட்டு உள்ளது. மீட்பு பணியை பார்த்த கிராம மக்கள் என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் மிகவும் அதிர்ச்சியுடன் பார்த்து உள்ளனர்.
சகதியில் இருந்து ஒருவர் பின் ஒருவரது சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம், தண்ணீர் வற்றிய பின்னர் அவை வெளியே தெரியவரும் என அஞ்சப்படுகிறது.

இதன்முலம் குஜராத்தில் மழை- வெள்ளம் தொடர்பான பல்வேறு விபத்து சம்பவங்களில் பலியோனோர் எண்ணிக்கையானது 111 ஆக உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News