செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளராக மீராகுமார் தேர்வு

Published On 2017-06-22 12:51 GMT   |   Update On 2017-06-22 12:51 GMT
பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தி உள்ளன.
புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தின.

17 எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே, அகமது படேல் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத்பவார், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுகவை சேர்ந்த கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்த்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை  ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தனர்.

பாஜக சார்பில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மீராகுமாரை எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
Tags:    

Similar News