உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூரில் கோஷ்டி மோதல்; போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய 13 பேர் கைது

Published On 2022-08-15 08:46 GMT   |   Update On 2022-08-15 09:58 GMT
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளையில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
  • போலீசாரின் இருசக்கர வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டது.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளையில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவில் முளைப்பாரி ஊர்வலம் கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது.

மீண்டும் மோதல்

இதனை அடுத்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் சிறுவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது திடீரென இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

பதட்டமான சூழ்நிலை காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் கலைந்து செல்லுமாறு கூறினார். இந்த மோதலில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ , இருசக்கர வாகனங்கள், அடித்து நொறுக்கப்பட்டது.

ரத்தினம் என்பவரது மாட்டுதொழுவத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.இதில் மாட்டு தொழுவம் சேதம் அடைந்தது.மேலும் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

கல்வீச்சு

இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய உதவியாளர் மேரி மற்றும் சாத்தான்குளம் டி.எஸ்.பி.யின் பாதுகாவலர் பால்பாண்டி (வயது27) ஆகியோர் கல்வீச்சில் காயம் அடைந்தனர்.

மேலும் போலீசாரின் இருசக்கர வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் திருச்செந்தூர் நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

13 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரை தாக்கி காவல்துறையினரின் வாகனத்தை சேதப்படுத்திற்காக திருச்செந்தூரைச் சேர்ந்த நட்டார்(32), கணேசன்(31), அய்யாதுரை(21), வேம்பு ராஜ்(20), நல்லசிவம் (28), நாகமணி(33), ஈணமுத்து(28), மாதவன்(29), முத்துக்குமார்(22), சதீஸ் முத்து(20), சுப்பிரமணியன்(45), ஈந்தடிமுத்து(34), ஆகிய 12பேரும், ஒரு சிறுவன் உள்பட 13பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

மேலும் மணிகண்டன்(23) என்பவரது புகாரின் பேரில் எஸ்.சி எஸ்.டி சட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News