தமிழ்நாடு

தடுமாறி விழும் வாகனங்கள்.... பாதுகாப்பு இல்லாத பயணம்: அம்பத்தூரில் உடைந்துபோன சாலைகள்

Published On 2024-05-23 10:58 GMT   |   Update On 2024-05-23 10:58 GMT
  • தேடி வந்தவர்களை வாழ வைக்கும் சொர்க்க பூமியாக அம்பத்தூர் தொழில் நகரம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
  • எதிர்பாராத விபத்துக்கள் நேரிட்டால் பரவாயில்லை. ஆனால் விபத்துக்களை உருவாக்குவது பராமரிப்பில்லாத சாலைகள்தான்.

சிறு தொழில் வளர்ச்சி நாட்டுக்கு தேவை. அதுவே வீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் உருவாவதை அதிகாரிகள் அனுமதிக்கலாமா? என்று ஒருவருக்கொருவர் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு நடுவில் ஒருவர் அணிந்திருந்த பேன்ட் கால் மூட்டு பகுதியில் கிழிந்தும் சட்டை தோற்பட்டையில் கிழிந்தும் இருந்ததை பார்த்தும் ஏதோ விபத்தில் சிக்கி இருக்கிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது.

அந்த கூட்டத்தின் அருகில் சென்ற நாரதர் காதை அவர்கள் பக்கம் திருப்பினார். என்னதான் நடக்கிறது? என்பதை அறிந்து கொள்ள காதை கூர்மையாக்கி கொண்டார்.

தொழிற்சாலைகள் பெருகுது! தொழில்கள் வளருகிறது! என்று பெருமைப்படு கிறார்கள். அதற்காக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கவனிக்க வேண்டும் அல்லவா?

சென்னையை அடுத்துள்ள தொழில் நகரம். இரை தேடி வரும் பறவைகள் போல் வேலை தேடி தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள்.

தேடி வந்தவர்களை வாழ வைக்கும் சொர்க்க பூமியாக அம்பத்தூர் தொழில் நகரம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலை செய்பவர்கள், மறைமுக வேலை பெறுபவர்கள் என லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை அம்பத்தூரை நம்பியே இருக்கிறது.

இதனால் குடியிருப்புகளும் பெருகிவிட்டன. அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி முதல் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலை, வாவின் சாலை, தொழிற் பேட்டை பிரதான சாலை, முகப்பேர் மேற்கு நெடுஞ்சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) மற்றும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கெமிக்கல் இரும்பு துணி ஏற்றுமதி தொழிற்சாலை என பல்வேறு தொழிற் சாலைகள் நிறைந்து உள்ளன. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி பொன்னேரி போன்ற பகுதியில் இருந்து பஸ்கள் மூலம் ஊழியர்கள்அழைத்து வரப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, போன்ற மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் தினமும் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இரும்பு ராடுகள் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை நடைபெறுகின்றன.

இதனால் இந்த கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை மேற்கண்ட சாலைகள் வழியாக சென்று வருவதால் தார் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது இதன் காரணமாக முகப்பேர், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனி, திருமங்கலம் போன்ற பகுதியில் இருந்து சென்னைக்கு பணிக்கு சென்று வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளார்கள். இந்த பகுதியை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது இந்த குண்டும் குழியுமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதுடன் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் கடந்த மாதம் கூட பெண் ஒருவர் தனது தம்பியை அங்குள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வரும்போது லாரி மோதி விழுந்து உயிரிழந்தார் அந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் இதே போன்று பள்ளிக்கு பெற்றோரடன் சென்ற மாணவன் பள்ளத்தில் கீழே விழுந்து இரண்டு கால்கள் முறிந்து போனது.

எதிர்பாராத விபத்துக்கள் நேரிட்டால் பரவாயில்லை. ஆனால் விபத்துக்களை உருவாக்குவது பராமரிப்பில்லாத சாலைகள்தான். மனித தவறுகளால் அரங்கேறும் இந்த ஆபத்துக்களை தவிர்க்க முடியும். அதற்கு சிட்கோ அதிகாரிகள் மனம் வைக்க வேண்டுமே என்கிறார்கள்.

எத்தனையோ பேர் இந்த சாலைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி முறையிட்டும் "குறை ஒன்றும் இல்லை கண்ணா..." என்பது போல் அதிகாரிகள் பாராமுகமாக சென்று வருகிறார்கள்.

ஒரு பகுதி சாலைகள் அடுத்த வாரத்துக்குள் சீரமைக்கப்படும் என்றும் அம்பத்தூர் 2-வது மெயின் ரோடு, அம்பத்தூர் வடக்கு பகுதியில் உள்ள சாலைகளும் சீரமைக்கப் படும் என்றும் சர்வ சாதாரணமாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால் உட்புற சாலைகள் நடந்து செல்லக்கூட தகுதியற்ற சாலைகளாகவே உள்ளன. இந்த சாலைகளை அவசர கோலத்தில் சீரமைத்தால் சரி வராது.

கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டியது அவசியம்.

தொழில் வளர்ச்சியால் மக்கள்.... மக்கள் வளர்ச்சியால் தொழில்கள் வளர்ச்சி.... என்பதை பொறுப்பானவர்கள் உணர்ந்து செயல்பட்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது.

Tags:    

Similar News