தமிழ்நாடு

சவுக்கு சங்கர் எதிர்கால நடவடிக்கை - உத்தரவாத மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2024-05-23 10:12 GMT   |   Update On 2024-05-23 10:12 GMT
  • சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
  • சிறையில் தாக்கப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையும் நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

யூடியூப்களில் பிரபலமானவர் சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர். இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு அந்தந்த போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பதை உத்தரவாத மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். என்னவெல்லாம் செய்ய மாட்டார் எனவும் பட்டியலிட்டு தாய் தெரிவிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் ஆவணங்களை ஆய்வு செய்த பின் மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், சிறையில் தாக்கப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையும் நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News